Saturday 30 March 2013

பொதிகை மலை உச்சியிலே..........





மாலை ஆறு மணிக்கு ' பொதிகை மலை உச்சியிலே  புறப்படும் தென்றல் 'என்று  திருமதி   தேவிகா  அழகாய் அபினயத்துடன் ஜில்லென்று   குளித்துக் கொண்டிருக்க  , அதைப் பார்த்துக் கொண்டிருந்த நான்   வியர்வையில்  நனைந்து  கொண்டிருந்தேன் . சரி, கொஞ்சம் காலாற  நடப்போம் , காற்றும் கொஞ்சம்  வாங்கி வருவோம்  என்று  செருப்பை மாட்டிக் கொண்டு  வெளியில் வந்தேன்.

கேட்டைப் போட்டுவிட்டு  தெருவில்   நடக்க   ஆரம்பித்தேன். " சர் " என்று ஒரு ஆட்டோ என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது. பயந்து போய்  பின் வாங்கினால்  ஒரு  குடும்பத்தையே  சுமந்து கொண்டிருந்த  ஸ்கூட்டர்  மேல் விழ இருந்தேன்.
நல்ல வேளை   அந்த மகானுபவர்  "பிரேக் "  அடித்தாரோ  பிழைத்தேன். நான் மட்டுமா, ஸ்கூட்டர் குடும்பமும் தான் .

இந்த  டிராபிக் ,    வீடுகள் , பிளாட்கள்   நிறைந்த தெருவில் தான். மெயின் ரோட்டிற்கு சென்றால்  நீங்கள் பார்க்கும் வண்டிகள் தான் எத்தனை, எத்தனை ?
சைக்கிளை மிதித்துக் கொண்டு செல்லும்  கொரியர்கள் , ஸ்கூட்டரில்  செல்லும் மத்திம வயதை எட்டிப்பிடிக்கும் ஆண்கள்,
ஸ்கூட்டியில்   துப்பட்டாவால்,  கண்களை மட்டும் விட்டு விட்டு முகத்தை மூடிக்கொண்டு செல்லும் இளம் பெண்கள். அவர்களைப் பார்க்க முடிய வில்லையே  என்ற கோபத்தில்  பைக்கின்  ஆக்சிலேரடரை  ஒரு திருகு திருகும்  இளம் வாலிபர்கள்,  ஹுண்டாய் , மாருதி, இன்னோவா , ஹோண்டா ,நிசான் , இண்டிகா, சுமோ  ,நானோ  , என்று கார்கள் கூட்டம். இதனிடையே   பாவமாய் அங்கங்கே நகரும் அம்பாசிடர்கள்.
பல்லவனின் பெரும் குடும்பத்துடன்  போட்டிப் போடும் தண்ணீர் லாரிகள் ,மீன் பாடி வண்டிகள், சிலிண்டர் சுமக்கும்  மூன்று சக்கர வாகனங்கள் ,டெம்போக்கள் ...........இத்யாதி இத்யாதி.......ஹப்பா,  மூச்சு வாங்குதே  சொல்லி முடிப்பதற்குள்.......

இது எல்லாவற்றையும்  ஒரு ஓரமாக  நிற்கவைத்துவிட்டு  முன்னேறும் கொண்டை வைத்த  கார்கள் , 108 வண்டி ..........

நினைத்துப்   பார்த்தால்  ஒரு முப்பது வருடங்கள் முன்பாக இத்தனை வண்டிகள்   இந்தியத் தெருக்களில் ஓடும் என்று யாராவது சொல்லியிருந்தால்  கண்ண்டிப்பாக வாய் விட்டு சிரித்திருப்போம்.

நம் தெருக்களில்  இத்தனை  கார்களா?  அதெல்லாம் சாத்தியமேயில்லை  என்று  அடித்து சத்தியமே செய்திருப்போம்.

ஆனால் இன்று ..........
உலகுக்கே  சவால் விட்டுக் கொண்டு,  குதித்து , உயரும்  பொருளாதாரத்தினால்   மக்களின் வாழ்க்கைத் தரம்  முன்பை விட உயரத்தில் தான்  இருக்கிறது.
நடுத்தர  வர்க்கம்  மெதுவாக  கார், விமானப் பயணம்  என்று   முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறது.
எல்லா தட்டு மக்களும்  முன்பை விடவும் ஓரளவு வசதியாகவே உள்ளார்கள்.
அங்கொன்றும், இங்கொன்றும்  தப்புகள் நடக்கலாம். பெருவாரியாகப் பார்த்தால்  இந்தியா முன்னேற்றப்  பாதையில் போய் கொண்டிருப்பதை  யாராலும் மறுக்க முடியாத உண்மை.

சரி போதும்'" பிறந்த வீட்டுப்  பெருமையை  உடன் பிறந்தான் கிட்டேயே என்ன பீற்றல்" என்று நீங்கள் சொல்வது  கேட்கிறது.ஏதோ  காற்று வாங்க.......... என்று ஆரம்பித்து  விட்டு  கேள்விக்கு பதில் தெரியாத மாணவன் மாதிரி எதோ டிராபிக்  ஜாம்  என்று இழுக்கிறாளே   என்று  உங்களின் பொறுமையை சோதிக்கிறேனோ?

இந்த டிராபிக்கிற்கு நடுவே நீங்கள் கொஞ்சம் நடந்து வாங்களேன். ஒவ்வொரு வண்டியும் விடும் புகை ,அதில் கலந்திருக்கும் lead எத்தனை  விஷமானது  என்று உங்களுக்கே தெரியும். என்ன தான்  pollution certificate  எல்லாம் வாங்கிக் கொண்டு செல்லும் வண்டிகள் தான் என்றாலும்   இந்தப் புகை  இல்லாமல் நம் தெருக்களை  நினைக்க முடிகிறதா? இந்தப் புகைக்கு நடுவில்  நிஜமாகவே புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் கொசு மருந்து வண்டிகள் . இதில் எங்கே நல்ல காற்று  கிடைக்கப் போகிறது.? காற்றே வேண்டாம் என்று முகத்தை கர்சீப்பினால்  மூடிக்  கொண்டு செல்பவர்கள் ஏராளம்.

எல்லா வித  சங்கடங்களையும், சவால்கலிலும்  எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு  வளரும்   தொழிற்சாலைகள்  அருகில் இருக்கும்  குடியிருப்புகளில்   கேட்டால் அவர்கள் சொல்வார்கள்   சுற்றுச்சூழலினால் அவர்கள் படும் அவஸ்தையை .

இந்தப் பிரச்சினை  நம்  நாட்டில்  மட்டும்  என்றெண்ணிக்  கவலை  வேண்டாம்.
நம்  பொருளாதாரத்தோடு  போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கும்  சீனாவில்
இந்தச் சுற்றுச்சூழல்    இன்னும்  மோசமாக இருக்கிறதாம்.
நாளிதழ்  ஒன்று சொல்கிறது.அங்கு , குறிப்பாக  தலைநகர் பெய்ஜிங்கில்  எப்போதும்  புகை  பனிமூட்டம்  போலவே இருக்கிறதாம்.இதனால்  மக்கள்  அங்கு  முகமூடி அணிந்து  நடமாடத்ட்  தொடங்கியிருக்கிறார்கள்.

சீன அரசு  எத்தனையோ  நடவடிக்கைகளை  எடுத்தும் கூட  இந்தப்   புகை மூட்டத்திலிருந்து  பெரிய  விடுதலை எதுவும் கிடைத்தபாடில்லை.

இந்த  நிலையை  உபயோகபடுத்திக்  கொண்டு  44 வயதாகும் " சென் குவாங்பியோ "  என்ற   தொழிலதிபர்  காசு  பார்க்கிறார் .. எப்படி என்கிறீர்களா?
ஆக்சிஜனைக்   கேனில்  அடைத்து  விற்கறார். ஒரு  கேனின் விலை  நம்மூர்  மதிப்பில் ரூ .40/  . இது வரை 80 லட்சம்  கேன்கள்  விற்றுத்  தீர்ந்து  விட்டன.
" காற்றுள்ள போதே  தூற்றிக் கொள் " என்பதை  உண்மையாக்கி  விட்டார் இந்த தொழிலதிபர்.

தண்ணீர்தான்  காசு கொடுத்து  வாங்குகிறோம்  என்றால் இனிமேல் காற்றையும்  காசு கொடுத்து வாங்கும் நாள் வெகு  தூரத்தில் இல்லை.



image courtesy---google.

25 comments:


  1. தண்ணீர்தான் காசு கொடுத்து வாங்குகிறோம் என்றால் இனிமேல் காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    நிதர்சன நிலையை உள்ளங்கை நெல்லிக்கனியாகப்பகிர்ந்திருக்கிறீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி,
      உங்கள் உடனடி வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  2. //இந்த நிலையை உபயோகபடுத்திக் கொண்டு 44 வயதாகும் " சென் குவாங்பியோ " என்ற தொழிலதிபர் காசு பார்க்கிறார் .. எப்படி என்கிறீர்களா?
    ஆக்சிஜனைக் கேனில் அடைத்து விற்கறார். ஒரு கேனின் விலை நம்மூர் மதிப்பில் ரூ .40/ . இது வரை 80 லட்சம் கேன்கள் விற்றுத் தீர்ந்து விட்டன.
    " காற்றுள்ள போதே தூற்றிக் கொள் " என்பதை உண்மையாக்கி விட்டார் இந்த தொழிலதிபர்.//

    புதுத்தொழில் தொடங்கியுள்ள அவர் புத்திசாலி தான்.

    //தண்ணீர்தான் காசு கொடுத்து வாங்குகிறோம் என்றால் இனிமேல் காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.//

    ஆம். உண்மை.

    வெகு அருமையான நகைச்சுவையான அலசல் கட்டுரை.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார், உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.
      நாம் காற்றை காசு கொடுத்து வாங்கும் நிலை வந்து விடும் என்றே நினைக்கிறேன்.

      Delete
  3. '" பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தான் கிட்டேயே என்ன பீற்றல்" என்று நீங்கள் சொல்வது கேட்கிறது//நீங்கள் மட்டுமல்ல எல்லா பெண்களுமே உங்களைபோலத்தானே

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் பிறந்த வீட்டை எப்படி சார் விட்டுக் கொடுப்பார்கள்.
      நன்றி உங்கள் கருத்துக்கு

      Delete
  4. வரும் நாட்களில் பெட்ரோல் பங்க் போல ஆக்ஸிஜன் பங்க்குகள் ஆங்காங்கே முளைத்து விடும் என்பதுதான் கவலைப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறதுங்க. இப்பவே இந்த மாதிரி ஆக்ஸிஜன் விக்க ஆரம்பிச்சுட்டாங்க...

    ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ன்னு எம்.ஜி.ஆர். பாடிட்டு குதிரை வண்டி ஓட்டறதையும், ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’னு நடந்துட்டே நாகேஷ் பாடறதையும் டிவியில பாக்கறப்ப பழைய மவுண்ட் ரோடு டிராபிக் எவ்வளவு வாகனங்கள் குறைவா, நிம்மதியா இருந்திருக்குடான்னு பெருமூச்சு வர்றதை தடுக்க முடியலை. இப்ப.... சொல்றதுக்கே உங்களுக்கு மூச்சு முட்டற நிலை! ஹும்...!

    ReplyDelete
    Replies
    1. சார்,
      உங்கள் முதல் வருகைக்கும் ,விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி.
      குதிரை வண்டியா? அது எப்படி பெட்ரோல் இல்லாமல் ஓடுமா என்று இந்தக்காலத்தவர்கள் கேட்பார்கள். இது ஒரு மெஷின் உலகம்.
      அதன் பலன் தான் இப்படி தண்ணீர், காற்று எல்லாம் காசு .
      தொடர்ந்து வாருங்கள்
      நன்றி

      Delete
  5. இந்த நிலையை உபயோகபடுத்திக் கொண்டு 44 வயதாகும் " சென் குவாங்பியோ " என்ற தொழிலதிபர் காசு பார்க்கிறார் .. எப்படி என்கிறீர்களா?
    ஆக்சிஜனைக் கேனில் அடைத்து விற்கறார். ஒரு கேனின் விலை நம்மூர் மதிப்பில் ரூ .40/ . இது வரை 80 லட்சம் கேன்கள் விற்றுத் தீர்ந்து விட்டன.
    " காற்றுள்ள போதே தூற்றிக் கொள் " என்பதை உண்மையாக்கி விட்டார் இந்த தொழிலதிபர்.

    தண்ணீர்தான் காசு கொடுத்து வாங்குகிறோம் என்றால் இனிமேல் காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.//

    நீங்கள் சொல்வது போல் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது காற்று. சுவாசிக்க முடியாதவர்களுக்கு அவசியம் தான்.

    கேதார்நாத, பத்ரி நாத் போகும் போது எல்லா கடைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர் விற்பார்கள் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படவில்லை என்றால் திரும்ப கொடுத்து விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி நான் கேதார் பத்ரி எல்லாம் போனதில்லை. ஆனால் போக வேண்டும் .நீங்கள் கொடுத்திருக்கும் டிப்ஸ் உபயோகமாயிருக்கும்.
      ஆக்சிஜன் சிலிண்டர் ரொம்ப வெயிட்டாக இருக்காதா? அதை எடுத்துக் கொண்டு நடக்க முடியுமா?
      உங்கள் கருத்துரை என்னை கேதார் பத்ரி எல்லாம் போகத்தூண்டுகிறது.

      நன்றி உங்கள் கருத்துக்கு கோமதி

      Delete
  6. நிலம் பொதுவாக இருந்ததென்பது
    இப்போது கதை போலப் படுகிறது
    குடி நீர் இலவசமாகக் கிடைத்ததும்
    கனவானிப் போனது
    இனி தூய காற்று ஒன்றுதான் பாக்கி
    அனைவரும் அவசியம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய
    கருத்தைக் கொண்ட பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. "அவர்களைப் பார்க்க முடிய வில்லையே என்ற கோபத்தில் பைக்கின் ஆக்சிலேரடரை ஒரு திருகு திருகும் இளம் வாலிபர்கள்"__________சூப்பரா எழுதறீங்க.இதே மாதிரி நிறைய.

    "மக்களின் வாழ்க்கைத் தரம் முன்பை விட உயரத்தில் தான் இருக்கிறது" _____ஊருக்கு வந்தால் 10 வருடத்திற்கு முந்தைய விலைவாசியே நினைவுக்கு வரும்.இப்போது செலவு அதிகம்போல் தெரியும்.ஆனால் உடன் இருப்ப‌வர்கள் சாதாரணமாகத்தான் செலவு செய்கிறார்கள்.

    எல்லாவற்றையும் சென்னையைச் சுற்றியே அடைப்பதால்தான் பிரச்சினை. வெளியிடங்களில் தொழிற்சாலைகள் இருந்தால் இவ்வளவு கூட்டம் இருக்காது இல்லீங்களா?தண்ணீர் போய் காற்றுக்கும் காசு கொடுக்க வேண்டும் என்பதை படிக்கும்போதே கஷ்டமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,
      உங்களை மாதிரி வாசகியின் பின்னூட்டம் எனக்கு நல்ல ஊக்கமளிக்கின்றது. வரிவரியாகப் படித்து ரசித்துள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

      இங்கெல்லாம் வாழ்க்கைத் தரம் ஓரளவிற்கு உயர்ந்து தான் இருக்கிறது.
      இல்லையென்றால் உயர்ந்து கொண்டே போகும் விலைவாசியை சமாளித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் எல்லோரும்.

      ஆனால் சுற்றுச் சூழல் நம்மை பயமுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது.
      நன்றி சித்ரா,
      உங்கள் வருகைக்கும், ரசித்து எழுதிய கருத்துரைக்கும்.

      Delete
  8. என்ன வேண்டுமானாலும் நடக்கும்... கலிகாலம்... கலிகாலம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கலிகாலம் தான் . இல்லையென்றால் இப்படியா........
      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன் சார்.

      Delete
  9. ஐயோ என்ன இப்படி பயம் காட்டீங்க காற்றையுமா ? சரியா சொன்னீங்க இங்கு நடப்பது தான் ரொம்பவே கஷ்டம் பகிர்வுக்குரொம்ப நல்ல இருக்கு

    //பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தான் கிட்டேயே என்ன பீற்றல்" என்று நீங்கள் சொல்வது// ......ஹா ஹா இது சூப்பர்
    // " காற்றுள்ள போதே தூற்றிக் கொள் " //......எப்படியும் எல்லாவற்றிலும் பணம் பார்க்கலாம் சுயநலதில் பொதுநலம் காண்கிறார்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மலர் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை.

      /பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தான் கிட்டேயே என்ன பீற்றல்"// நம் பிறந்த வீட்டுப் பெருமையை வேறு யார் காத்து கொடுத்துக் கேட்பார்கள்.
      ஏதோ சுய நலத்திலாவது பொது நலம் காண்கிறார்களே சிலர் என்று நிம்மதி கொள்ள வேண்டியது தான்.

      நன்றி மலர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மலர்.

      Delete
  10. முப்பதென்ன, இருபது வருடங்களுக்கு முன்னாள் கூட இவ்வளவு வாகனங்கள் கிடையாது! கட்டிடங்களும்! 90 களில் வந்த திரைப் படங்களைப் பாருங்கள். அதில் சென்னை அண்ணா சாலையைக் காட்டும்போது தெரியும்!

    படித்துக் கொண்டே வரும்போது ஆக்சிஜன் மாசக் தயார் செய்து விற்றால் நல்ல காசு பார்க்கலாம் என்று தோன்றியது. கீழே படித்தால் அதேதான் செய்திருக்கிறார் அவர்.

    லேபிளில் பச என்று இருப்பது என்ன?

    'குடிக்கும் நீரை விலைகள் பேசி கொடுக்கும் கூட்டம் அங்கே' என்று எம் ஜி ஆர் பாடல் ஒன்றில் வரும். (அன்புக்கு நான் அடிமை). இப்போது காற்றும்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் . நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இருபது வருடங்களுக்கு முன்பாக இருந்த அன்னாசாலையா இது? என்று பிரமிக்க வைக்கிறது.
      நீங்கள் சுட்டிக்காட்டிய "பச" திருத்தி விட்டேன்.
      சுட்டியமைக்கும், வந்து கருத்திட்டமைக்கும் நன்றி சார்.

      Delete
  11. உண்மை அருமையான கட்டுரை
    பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete

  12. அப்படிக் காற்று விற்பனைக்கு வந்தால் அதன் முதல் தேவை எங்களூர் பெங்களூர்தான். இங்கு சுமார் 30 சதவீதம் பேர் பொலூஷன் சம்பந்தப்பட்ட ஆஸ்த்மா, மற்றும் அலர்ஜி நோய்களால் அவதிப்படுகின்றனர். தற்சமயம் ஏதும் செய்ய இயலாத விழிப்புணர்ச்சிக் கட்டுரை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. GMB சார்,

      பெங்களுரில் காற்றை மட்டும் குற்றம் சாட்டுகிறீர்களே!காற்றிற்கு கோபம் வந்து விடப் போகிறது. உங்கள் ஊரில் பார்த்தீனியம் படுத்தும் பாடு இன்னும் மோசம் தானே? இல்லை இப்பொழுது நிலைமை சீரடைந்து விட்டதா என்ன?
      எதுவானால் என்ன? நன்றாகவே நாம் எல்லோரும் மாட்டிக் கொண்டு முழிக்கிறோம்.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  13. 'காற்று வாங்கப் போனேன்' என்ற பாடல் நிஜமாகிவிடும் போலிருக்கே!
    பெங்களூரிலும் ஆக்ஸிஜென் அறை என்று இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அங்கே போய் பணம் கொடுத்து 'காற்று வாங்கி' வரலாம்.

    முன்பு பார்த்தீனியம் இருந்த இடமெல்லாம் இப்போது அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்தாயிற்று, பெங்களூரில்!

    ReplyDelete
    Replies
    1. ஓ...அப்படியா, இப்போது பார்த்தினியம் இல்லையா?
      நீங்கள் 'காற்று வாங்கி ' இருக்கிறீர்களா?

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரஞ்சனி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்