Wednesday 19 August 2015

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு--5







" அம்மா,  இன்றைக்கு  பிசிபேளா செய்யேன் " என்று ராஜேஷ்  சொல்லவும் ராசியும்  அதற்கு  வேண்டிய   சாமான்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள

" சாம்பார் வெங்காயம் இல்லையேடா .  கிடைக்குமா? " என்று  ராசி கேட்க அதெல்லாம் கிடைக்கும் . அப்புறம் .....என்று ராஜேஷ் கேட்கவும், முருங்கைக்காய் இருந்தால் நன்றாக வாசனையாக இருக்கும் .
"  என்று ராசி சொல்லவும் ,

 " எல்லாமே இருக்கும்மா .ஒன்று செய்யேன்.... என்னவெல்லாம் வேணும் என்று எழுதிக் கொடு . நான் வாங்கி வந்து விடுகிறேன். "  ராஜேஷ் சொல்ல

ஆர்த்தி முந்திக் கொண்டு " பேசாமல் மாமியை அழைத்து சென்று விடுங்கள் அவர்களும்  இந்த ஊர் கடையைப் பார்த்தால் போலிருக்கும் . வேண்டுமென்பதை வாங்கிக் கொள்வார்கள் " என்று சொல்ல ராசியும் கிளம்ப ஆயத்தமானாள் .

பேரன் அர்ஜுன் ," நானும் தான் வருவேன் " என்று அடம் பிடிக்கவும், ராஜேஷ் அவனுக்கான பூஸ்டர்  சீட், ஸ்ட்ராலர், எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பினான். "

" இதெல்லாம் எதுக்குடா "-ராசி கேட்க ,

" அம்மா இந்த ஊரில் குழந்தைகளைத் தனியாகவோ, நம் மடியிலோ உட்கார வைத்துக் கொண்டு செல்வது குற்றம். அதனால் அவனுடைய இந்த சீட்டில் தான் உட்கார வேண்டும். "

" நம் குழந்தையை நம்  மடியில் வைத்துக் கொண்டால் ................ குற்றமா?   என்ன அமெரிக்காவோ போ ! " என்று அலுத்துக் கொண்டாள் .

குழந்தைகளை  மடியில் உட்கார வைத்துக் கொண்டு  , ஆசையாசையாய்  வேடிக்கைக் காட்டிக் கொண்டு  போகாமல் இதென்ன  கூத்து " நினைத்துக்  கொண்டாள் ராசி.

ஏறி  உட்கார்ந்ததும், அர்ஜுனை சீட்டில் உட்கார வைத்து பெல்ட் எல்லாம் போட்டு விட்டதும்  அவனும் சமர்த்தாக உட்காரவும், காரை ஸ்டார்ட் செய்தான் ராஜேஷ்.

ராசியோ வெளியே பார்க்காமல் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருந்தாள் . 
என்ன பாத்தி பாக்கறே " என்று ஆர்ஜுன் மழலையில்  கேட்க ," "ஒண்ணுமில்லேடா" என்று சுரத்தேயில்லாமல் பதிலளித்தாள் . அர்ஜுனை  இப்படி  அழைத்து செல்வது ராசிக்கு சுத்தமாகப் பிடிக்கவேயில்லை.

அப்பப்போ அர்ஜுன் வேறு தன்  சீட் பெல்ட்டை  கைகளால் இழுத்து இழுத்து லூஸ் செய்து கொண்டே வந்தான். இதை கவனித்துக் கொண்டே வந்த ராசி, சட்டென்று ரோட்டைப் பார்க்க  , வெறிச்சோடிக் கிடந்தது போகும் வழி. "சர் சர் என்று கார்கள் தங்களைத் தாண்டி,  வேகமாக போய்க் கொண்டேயிருந்தது.

ஒருவருக்கும் ஒருவரைக் கவனிக்கவும் நேரமேயில்லை என்று புரிந்தது.

பார்த்தாள்  ராசி. சட்டென்று சீட் பெல்ட்டை சத்தமில்லாமல் கழற்றி விட்டு , அர்ஜுனைத் தூக்கி மடிமேல் வைத்துக் கொண்டு ஆசையாய் அணைத்துக் கொண்டாள்.  அர்ஜுன்  உதட்டின் மேல் சுட்டு விரலை  வைத்து ,உஷ்.........  என்று  சொல்லவும் , ராஜேஷ் திரும்பிப் பார்க்கவும் சரியாயிருந்தது.
பார்த்த ராஜேஷ் அரண்டு விட்டான்.
" அம்மா  ஏன் அவனை  இறக்கி விட்டாய்? மாட்டப் போறேன் நான் ......"

" பாவமாய் இருந்ததுடா ....."

" இப்போ எங்கே நான் நிறுத்துவது?......என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே  , பல கலரில்  லைட்டுகள்  டாலடிக்க ஒரு கார் இவர்கள்.  காரை மறிப்பது  போல் நின்றது.

" என்னடா ஆச்சு? "

" போலீஸ்  வந்திருக்கிறார்கள்."

" போலீசா? எதுக்கு?"

"  நீ அர்ஜுனை  அவன் சீட்டிலிருந்து  தூக்கி மடியில் வச்சிருக்கியே . அதுக்குத் தான். "

" அது ஒரு குத்தமா? ? என் பேரனை நான் மடியில் வச்சுக்கக் கூடாதா ?"

" அதெல்லாம் இங்கே செல்லுபடியாகாது. பேசாமல் இரு. செய்யறதையும் செஞ்சுட்டு......." ராஜேஷ் அலுத்துக் கொள்ள.

" அப்பொழுதுப் பார்த்து "கிணுங்....கிணுங்......"என்று செல்லமாய்  செல்போன்  சிணுங்க , அதைக் கவனியாதவன் போல்  ராஜேஷ் ஸ்டியரிங் மேல் வைத்தக் கையை  எடுக்காமல்  போலீஸ் காரையே   வெறித்துப்  பார்த்துக் கொண்டிருந்தான்.


 " ராஜேஷ் போன் அடிக்குதுடா " ராசி  சொல்ல

" எனக்கும் கேக்குது.  ஆனால்   நான் கையை  எடுத்தால் போலீஸ்  என் மேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு  " என்று சொல்லவும்......அமைதியாகி விட்டாள்  ராசி.

அதற்குள் ஆஜானுபாகுவான போலீஸ்காரர் ஒருவர் நீல நிற உடையில் இவர்கள் காரைப் பார்த்து சர்வ அலட்சியமாக நடந்து வந்துக் கொண்டிருந்தார்.  தன்  இடுப்பில் ஒட்டியாணம் போல்  கட்டிக் கொண்டிருந்த உபகரனங்களை  சரி செய்து கொண்டே ராஜேஷைப் பார்த்து ," எதற்காக  உங்களை  நிறுத்தினேன் தெரியுமா? " என்று கேட்கவும், ராஜேஷ்  சமாதானமாக எதையோ சொல்ல  முயற்சிக்கவும், பின்னாலிருந்த ராசி சும்மா இல்லாமல்," தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், " வாட் இஸ்  ராங்  ராஜேஷ் ?" என்று   கேட்கவும்,  போலீஸ்காரருக்கு  வந்ததே கோபம்.

போலீஸ்காரரின்  சிவந்த முகம் மேலும் ஜிவுஜிவுத்தது. 

அவர் கோப முகத்தைப் பார்த்து  , அர்ஜுன்  அழ  ஆரம்பிக்க, ராஜேஷ் ராசியை அடக்கி விட்டு போலீஸ்காரரிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக  அவனிடம்   ஃ பைனைத்  திணித்து விட்டு ,ராசியைப் பார்த்து, " நீங்கள் இருவரும் செய்திருக்கும் குற்றத்திற்கு என்ன தண்டனை என்று தெரியுமா?
 இவ்வளவு பெரிய குற்றம் செய்து விட்டு,  என்னைப் பார்த்து" வாட்  இஸ் ராங் ?  என்று வேறு கேட்கிறீர்கள் . இவர் செய்யும் முதல் தவறு என்பதால்  பாயிண்ட்ஸுடனும் ,  ஃபைனுடனும் மட்டும் விட்டு   விடுகிறேன் . என்று  ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளி விட்டு  "முதலில் அவனை (அர்ஜுனை)அவன் சீட்டில் உட்கார  வைக்கவும்" என்று  கம்பீரமான தொனியில்  மிரட்டி  விட்டு நகர்ந்தார்.

ராஜேஷ் இப்பொழுது ராசியைப் பார்த்து, " உன்  வாய் சவுடாலை எல்லாம் கொஞ்ச நாளைக்கு  நிறுத்தும்மா.  ஏதோ  அவருக்கு நல்ல மூட்  போலிருக்கிறது. நீ கேட்ட கேள்விக்கு அவர்  உன்னை  அவர் போலீஸ்  ஸ்டேஷனிற்கு  அழைத்துக் கொண்டு போயிருந்தால் என்ன செய்வே?" என்று கோபமாக  கத்தி விட்டு ," பிசிபேளாவும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்   ." சொல்லி விட்டு அர்ஜுனைத் தூக்கி  அவன் சீட்டில் உட்கார வைத்து பெல்ட்டைப் போட்டு விட்டு வீட்டை  நோக்கி காரை செலுத்தினான்.


வீடு வந்து சேர்ந்ததும், இருவர் முகத்தைப் பார்த்ததுமே, விஷ்ணுவும் ஆர்த்தியும் அரண்டு போய்  " என்ன ஆச்சு , என்ன ஆச்சு ?" என்று பதறவும் ,  அர்ஜுன்  தன் மழலையில், போலீஸ்.........  கார்.......... என்று  புரிய வைக்க முயல...... ."

ராஜேஷ் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அவன்  அமைதியாக சிறிது நேரம் பிடித்தது. பிறகு விவரமாக எல்லாவற்றையும் ஆர்த்திக்கும் விஷ்ணுவிற்கும் விளக்கினான்.

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த ராசியோ தனக்கும் இதற்கும்  சம்பந்திமில்லாதது போல்  யாரிடமும் பேசாமல் அவள் பாட்டிற்கு சமையலறைக்கு சென்று  டிஷ் வாஷரில்  பாத்திரங்களை  லோட்  செய்ய ஆரம்பித்தாள் .

" அம்மாவிற்கோ  பட்லர்   இங்கலீஷ் தான் தெரியும். இதில் இந்த ஊர் போலீஸ்காரரிடம் வாக்கு வாதம் வேறு. இன்றைக்கு நாங்கள் தப்பியது எப்பவோ செய்த புண்ணியா பலன் தான் " என்று   ராஜேஷ் அலுத்துக் கொள்ளவும்.

விஷ்ணு," சரி எப்படியோ ஃ பைனுடன் கதை சுபமாக முடிந்ததே . அதை சொல்லு. " 
பிறகு தொடர்ந்தார்,"உனக்கு உங்கம்மாவின்  இங்க்லீஷ்  புலமை பற்றி இன்னும் விவரமாகத் தெரியணுமா? சொல்கிறேன்,கேள் அவள் ஹோட்டலில் காபி குடிக்கப் போன கதையை?

ஆர்த்தி எல்லா வேலையும்  அம்போ என்று விட்டு விட்டு கதை கேட்கும்  ஆவலுடன் (அதுவும் தன்  மாமியார் பற்றி)  என்னாச்சு மாமா ? என்று கேட்டுக் கொண்டே உட்கார,

" என்ன ஆச்சுத் தெரியுமா? " என்று சொல்ல ஆரம்பிக்கவும், போன்  கிணு கிணுக்கவும் சரியாயிருந்தது.  இந்திய நண்பருடன் விஷ்ணு போனில் பேச ஆரம்பித்தார்..

ராசியோ எதுவுமே நடக்காதது போல்  அர்ஜுனிற்கு  ராமர் கதையை  சொல்லி , சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள்

அர்ஜுனும்  " அப்புறம்........................ என்ன ஆச்சு ? ராவணன்  சீதாவை  விட்டானா இல்லையா ? என்று வாய் நிறைய சாதத்துடன்  கேட்டுக் கொடிருந்தான்.

ஆர்த்தியோ , தன் மாமனார் போன் பேசி முடித்து விட்டு வர  ஆவலுடன் காத்திருக்க ..........

நானும் தான் .......ஏன்  நீங்களும் தான் என் அடுத்த பதிவிற்கும் வாங்களேன். ராசி காபி குடிக்க செய்த கலாட்டா தான்  என்ன என்று  தெரிந்து கொள்வோமே .........

image courtesy--google.

21 comments:

  1. பல மாதங்கள் கழித்து இணையத்திற்கு வருகிறீர்கள் போல! தொடர்ந்து வருகை புரியவும். ராசி செய்த கலாட்டாவைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா மேடம். பல நாட்களுக்குப் பிறகே வருகிறேன். பல காரணங்கள். எதைச்சொல்ல ? ஒரு பதிவே எழுதலாம்......இனி இணையத்திற்கு தொடர்ந்து வர நினைத்திருக்கிறேன்.
      உங்கள் வருகைக்கும், ஊக்கப்படுத்தும் பின்னூட்டத்திற்கும் நன்றி மேடம்.

      Delete
  2. குழந்தைகளை மடியில் உட்கார வைத்துக் கொண்டு, ஆசையாய் வேடிக்கைக் காட்டுவதற்குக் கூட கொடுப்பினை இல்லையா!..

    இதற்கிடையில் -

    காபி குடித்த கலாட்டா வேறு இருக்கின்றதா!?..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் துரை சார் . வெளியில் எங்கு சென்றாலும் காரில் இப்படித்தான் குழந்தைகள் அங்கு பயணிக்கிறார்கள். நமக்கு சற்று புதிதான விஷயம் தான்.அதனால் என்ன அவர்களின் நன்மைக்குத் தானே என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  3. கொடுமை. இதற்கெல்லாம் தண்டனையா என்று தோன்றினாலும் இது போன்ற ஒழுங்குகளில் அவர்கள் கண்டிப்பாயிருப்பது போல நம்மூரில் இல்லையே என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் அமெரிக்காவில் மிகவும் முக்கியமானவர்கள் .அவர்கள் விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும். எதற்கு வம்பு சொல்லுங்கள். A B C D .......என்று சொல்லிக் கொடுப்பதற்கு முன்பாகவே 911 சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். நம் ஊரிலும் இந்த கெடுபிடி வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

      உங்கள் வருகைக்க்ம், கருத்து க்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  4. Replies
    1. உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றி மேடம்.

      Delete
  5. அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், ஆர்வத்திற்கும் நன்றி சார் .

      Delete
  6. நமக்கு அநியாயம் என்று தோன்றுவது அங்கு சட்டம் ஹூம் அடுத்த எபிசோடுக்காகக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்

      Delete
  7. எனக்கும் என்ன அமெரிக்கவோ என்று தோன்றியது பேரனை மடியில் ஆசையாக வைத்துக் கோள்ள முடியாத போதுதான்.

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவிற்கு செல்லும் நம்மவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
      உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கோமதி..

      Delete
    2. அமெரிக்காவிற்கு செல்லும் நம்மவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
      உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கோமதி..

      Delete
  8. பாதுகாப்பிற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. நமக்குப் புதிதாகவும் தேவையில்லாததாகவும் தோன்றுகிறது....

    காபி கதை கேட்க நானும் தயாராக இருக்கிறேன்.

    சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு படித்து மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்....

    ReplyDelete
  9. Rasi made a BIG MISTAKE! I am really surprised, she did not know better! In the freeway we usually drive about 70 mile per hour. We cant feel it as everyone drives in the same speed (theory of relativity?). If something goes wrong, seat belt and booster seat air-bags can save our lives. If we do not put the seat belt on, it is like committing suicide. Anyway, Rasi does not have any right to put the child in danger like this. Seriously she is lucky that the cop was a reasonable guy!

    If Rasi wants to have fun with her grandson, she should wait till the car gets to a mall or a park or any children play-place! Not in the car!

    Like I said, when we visit a foreign country we are like a child learning about "flame" and "ice"! That's exactly what was going on here!

    ReplyDelete
    Replies
    1. Yes sir. As you pointed out Rasi did make a big mistake. But from her subsequent visits she learnt that in a foreign land laws of that land can be different from ours. But she did not learn this easily. Some experiences she went through were really funny and some were not.And of course some sprang as a surprise for her. The idea of this series is to bring out atleast some of them.
      Thankyou for understanding my intention and commenting on it.

      Delete
  10. தமிழ்ப் பதிவர் கையேட்டில் என் தளத்தைப் பற்றியக் குறிப்புகள் கொடுக்க வேண்டிய விதம் பற்றிய உங்கள் அறிவிப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன் என்றே சொல்ல வேண்டும்.
    சில மாதங்களாக, பல காரணங்களினால் என்னால் பதிவுகள் எழுத முடியாமல் இருந்தது. அதில் சோம்பலும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் உங்கள் அறிவிப்பு என் எழுத்தை எனக்கே அறிமுகப்படுத்தியது. அதற்காக என் நன்றிகள் பல.

    மீண்டும் புத்துணர்ச்சியுடன் பதிகள் எழுதத் தொடங்குவேன் என்பதில் சந்தேகமில்லை.
    என் எழுத்தின் மீது அக்கறைக் கொண்டு , அதைக் கையேட்டின் மூலம் பலருக்கும் அறிவிக்கும் முறைப்பற்றி எடுத்துரைத்த உங்களுக்கு என் நன்றிகள் பல தனபாலன் சார்.

    கையேட்டில் என் தளத்தை இணைக்கும் படிவத்தை நிரப்பி அனுப்பி விட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  11. அன்புள்ள மேடத்துக்கு என் தளத்தில் இடியாப்பச் சிக்கல் கதைப் போட்டி அறிவித்திருக்கிறேன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உடனே பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் பாலு சார். இடியாப்ப சிக்கல் என்று நீங்கள் சொல்லி விட்டீர்களே சார். எப்படி தேடினாலும் அதன் ஒரு முனை மட்டுமே கண்ணிற்குத் தருகிறது. அதுவும் நீங்கள் சொல்லியிருப்பதால் தான். எத்தனை முயன்றும் இடியாப்ப சிக்கலின் மறுமுனை எனக்கு அகப்படவில்லை சார். ஆதலால் இந்தப் போட்டியில் நான் இல்லை.
      புரியாத புதிராக இருக்கிறது இக்கதை.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்