Monday 11 March 2013

பல்லாங்குழி
















இன்று    காலை   சமையல்  செய்யும்  போது   எங்கிருந்தோ  "பல்லாங்குழியின்   
வட்டம்     பார்த்தேன்  "  என்ற பாட்டு     மிதந்து   வந்தது. 

பல்லாங்குழியின்  விளையாட்டு   நினைவிற்கு  வந்தது.   டி .வி.யும் ,  இண்டர்நெட்டும்   ஆட்சிக்கு வராத  காலம்  அது.

 பெண்களும் இப்போது போல்  ஸ்கூட்டியிலும் , காரிலும்   பறக்காத     காலமும்    கூட .  அதுவும்   கிராமங்களில்    இருக்கும்,  பெண்கள்  வீட்டினுள்   பூட்டியே    வைக்கப்  பட்டிருந்த  போது ,   அவர்களுக்கு  பொழுது போக்குத்   துணையாக   இருந்தது,    இது  மாதிரி   விளையாட்டுக்கள்  தான்.

இந்தக்    காலத்தவர்களுக்குப்   புரியும்படியாக   சொல்ல  வேண்டுமென்றால்  
பல்லாங்குழி   ஒரு  " board game"   என்று   சொல்லலாம் .

கிராமங்களில்   பல்லாங்குழி,   இல்லாத   வீடே   இல்லை, என்று  கூட  சொல்லலாம்.

அப்போதெல்லாம்    ஒவ்வொரு  வருடமும்  கோடை  விடுமுறைக்கு  தாத்தா 
வீட்டிற்கு   செல்வது  வழக்கம் .
கம்பர்  பிறந்த,  தேரெழந்தூர்    அருகே,    காவிரி  (இனிமேல்   பெருக்கெடுத்து   ஓடப்  போகிறது )  பாயும்   ஒரு  சின்ன அழகான  கிராமம்  என்  தாத்தா ஊர் .

வீடு,      கூடம் , முற்றம், தாழ்வாரம், திண்ணையென்று இருக்கும்.   பெரிய நகரத்து  வசதிகள்   எதுவும்  இருக்காது.  ஆனால்  அந்தக்  கிராமமும்,   வீடும்   நெஞ்சை  அள்ளிக்  கொண்டு தான்  போகும்.   எழுத  ஆரம்பித்தால்  அது  ஒரு  தனி  பதிவாகி விடும்.  

கூடம்   தாழ்வாரம்   எல்லா இடத்திலும் ,   அழகழகாய்    தூண்கள்   உண்டு.  ஏதாவது   ஒரு   தூணின் ஓரமாக  ,   அமைதியாய்   இந்தப்   பல்லாங்குழியார்   அமர்ந்திருப்பார்.  

பதினான்கு   குழிகள்.  இந்தக்   குழிகளில்  12  சோழி  அல்லது  புளியங்கொட்டையோ     போட்டு    விளையாடுவது  வழக்கம்.   ஆனால்  ஒவ்வொரு  ஊரிலும்   ஒவ்வொரு  மாதிரி  விளையாடுவார்கள் .

இரண்டு  பேர்   எதிரெதிர்    அமர்ந்து கொண்டு   விளையாட  ஆரம்பிப்பார்கள் .ஒரு குழியில்   இருந்து    சோழிகளை    எடுத்து  
 " clockwise "  ஆகப்   போட்டுக்கொண்டே   வரவேண்டும் . முடிந்த  இடத்திலிருந்து  திரும்பவும்  சோழிகளை  எடுத்து  சுற்றி வர ஒரு  நேரத்தில் கையில்    இருக்கும் சோழியும்  தீர,  நம்  எதிரே   காலி  குழி இருக்கும்.  அதற்கு   அடுத்த குழியில்  இருக்கும்  சோழிகள்   எல்லாம்  நமதே.

இதுபோல்     இருவரும் விளையாடிக்  கொண்டே  பல  ரவுண்டுகள் 
வரை   போகும்.  ஒருவர்    " போண்டி"யாகும் வரை  ஆடிக் கொண்டேயிருக்கலாம்.நேரம்    போவதும் தெரியாது. 

வாழ்க்கையின்  பல   அற்புதமான  பாடங்களை  இந்த  விளையாட்டு   சொல்லித் தருவதாக   எனக்குத்  தோன்றும்.

நாம்   எத்தனை ஜாக்கிரதையாகக்   கையாண்டாலும்   , எவ்வளவு    அழகாக    எதிரில்   விளையாடுபவரின்  மன  ஓட்டத்தை  படித்தாலும்   நாம்  ஒரு  சமயத்தில்    தோற்றுத் தான்  போகிறோம்.

 எத்தனை சொல்லித்  தருகிறது  பாருங்கள்.

1.  ஒரு  உளவியல்  மருத்துவரைப்  போல்   எதிரில்  இருப்பவரின்   மன ஓட்டத்தை  படிக்க  கற்கிறோம் 

2. "calculated  risk " என்று    சொல்கிறார்களே அதைப்  புரிந்து    கொள்கிறார்கள் .தோல்வியை   ஏற்றுக்   கொள்ளும் மனப்பக்குவமும்  வந்துவிடும் .

3. மனக்   கணக்கு   மிக  மிக  எளிதாக  எந்த   முயற்சியுமின்றி   வந்துவிடுகிறது. 

4.  மிகச்  சிறிய  வயதில் ,  அதுவும்  5,  6,  வயதுப்   பெண்கள்  விளையாடும்  போது,  அவர்களுடைய   கண்ணும் கையும்   ஒருங்கிணைந்து   செயல் பட உதவுகிறதாம் .  (hand , eye  co.ordination).  

5. படிக்கும் வயதில்  பல்லாங்குழி  விளையாடும்  போது     கணிதமும் எளிதாக  வசமாகும்   என்று  படித்திருக்கிறேன்.

6. மன  அழுத்தம்   நீங்குவதற்கும்   இதை விளையாடுவது   ஒரு  உபாயம்.

  சிறுமிகளுக்கும்  ,  இளம்,  மற்றும்   நடுத்தர  வயதுப்   பெண்களுக்கும்   மட்டுமல்ல    மூட்டு வலிக்கும்   விளையாடுவது  நல்லது   என்கிறார்  மருத்துவர்.

அன்று  எனக்கு    கை கட்டை  விரலும்   ஆட்காட்டி  விரலும்   நல்ல  வலி.
எப்போழுதும்  , லேப்டாப்பே  கதியென்று  ,இருந்தால்  இப்படித்   தான்  வலிக்கும்   என்று  எல்லோரிடமும்   திட்டு  வாங்கிக்  கொண்டு,   குடும்ப  மருத்துவரை    அணுகினேன். 

அவர்    கால்சியம்    மாத்திரை    எழுதிக்  கொடுத்துவிட்டு   கைக்கு         
பயிற்சி  செய்யேன்   என்றார்.  என்ன  பயிற்சி  ?  என்று  யோசித்தேன். 

 பல்லாங்குழி விளையாடினால் என்ன   என்று  தோன்றியது.
விரல்  கை  மூட்டு  எல்லாவற்றிற்கும்   நல்ல  பயிற்சி. என்   மூளையும்(அப்படி ஒன்று இருந்தால்)   நல்ல   சுறுசுறுப்பாகும்.

சாதாரண   பல்லாங்குழியில்     இத்தனை  மருத்துவ குணமா !
நம்   முன்னோர்கள்   யாரும்   மூடர்   இல்லை .

இது  எதோ நம்மூர்   கிராமங்களில்   மட்டும்  தான்,  அதுவும்  பெண்கள்   தான்    விளையாடுகிறார்கள்    என்று  குறைத்து  மதிப்பிட  வேண்டாம். ஆண்களும்  விளையாடுவதுண்டு.  

நம்மூர்  திருமணங்களில்   கூட   நலங்கு  விளையாட்டின் போது  பல்லாங்குழி  இடம்  பெறும்.

உலகம்   பூராவும்  பல்வேறு   பெயர்களில்  "Manacala,  Warri,  Oware"  என்று
பல்லாங்குழி   விளையாடப் படுகிறது.

அமெரிக்கா ,ஐரோப்பா, ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ்  என்று  அடுக்கிக்   கொண்டே போகலாம்   பல்லாங்குழியின்     ஆதிக்கத்தை.

நம்  சதுரங்க    வீரர்  திரு . விஸ்வநாத்  ஆனந்த்  தன்னை  இலகுவாக்கிக்   கொள்ள   கால் பந்து  விளையாடுவாராம்   . கேள்விப்  பட்டிருக்கிறேன்.

நம்   கிரிக்கெட்  வீரர்  திரு .  ஹர்பஜன்   சிங்   என்ன   விளையாடுகிறார் ?  பாருங்கள்.....

வீட்டில்    இருந்த   பல்லாங்குழியைத்   தேடிப்   பார்த்தேன்  .  கிடைக்கவில்லை. 

மைலாப்பூர்     சென்று ஒன்று  வாங்கி   வந்து விட்டேன். விளையாட  யாருமில்லைஎன்றால்     சீதாப்   பாண்டி (பல்லாஙகுழியில் தனி ஒருவராக அடுவது)!     விளையாட  வேண்டியது   தான்.

image courtesy--www.indianetzone.com
                          google.
 

       



  

24 comments:

  1. பல்லாங்குழியைப்பற்றி அழகானதொரு பதிவு கொடுத்து அசத்திட்டீங்கோ. படமும் நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார் உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  2. // பல்லாங்குழி விளையாடினால் என்ன என்று தோன்றியது. விரல் கை மூட்டு எல்லாவற்றிற்கும் நல்ல பயிற்சி. என் மூளையும்(அப்படி ஒன்று இருந்தால்) நல்ல சுறுசுறுப்பாகும்.

    சாதாரண பல்லாங்குழியில் இத்தனை மருத்துவ குணமா ! நம் முன்னோர்கள் யாரும் மூடர் இல்லை .//

    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். ;)))))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி வைகோ சார்.

      Delete
  3. உங்களைப் போலத்தான் நானும். கோடை விடுமுறையில் பாட்டி வீடான ஸ்ரீரங்கம் போகும் போதெல்லாம் பல்லாங்குழி விளையாடுவோம். பாட்டி எங்களுக்கென்றே புளியங்கொட்டை சேர்த்து வைத்திருப்பாள். நாள் முழுக்க அலுக்காமல் சலிக்காமல் ஒருவர் மாற்றி ஒருவர் விளையாடிக் கொண்டே இருப்போம்.

    பல்லாங்குழியில் இருக்கும் குந்துமணியைப் பார்த்தவுடன் இன்னொரு நினைவு வந்தது. கேரளா கோவில் ஒன்றில் மிகப்பெரிய தாம்பாளம் நிறைய இந்த மாதிரி குந்துமணி வைத்திருக்கிறார்கள். அதை நம் கைகளால் அளைந்தபடியே நாம் ஏதாவது நினைத்துக் கொண்டால் நினைத்த காரியம் நடக்குமாம்.
    எதுவும் நினைக்காமல் அத்தனை குந்துமணிகளை ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் ஆசை தீர அளைந்துவிட்டு வந்தேன்!

    பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டீர்கள், ராஜி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நம்முடைய பழைய நினைவுகள் மிக மிக இனிமையானவை. அப்படியே பழைய உலகத்திற்கு போய் விடுவோம்.

      வேறு பல மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் கேரளா சென்றதில்லை. அதனால் நீங்கள் சொன்ன விஷயம் எனக்கு நியுஸ்.
      சந்தர்ப்பம் கிட்டினால் கண்டிப்பாக நானும் அளைந்து விட்டுத் தான் வருவேன்.

      நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.

      Delete
  4. வாழ்க்கையின் பல அற்புதமான பாடங்களை இந்த விளையாட்டு சொல்லித் தருவதாக எனக்குத் தோன்றும்.//

    விளையாட்டாக வாழ்க்கைக்கல்வியைப்
    போதித்த நம் முன்னோர் வியக்கவைக்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி ராஜராஜேஸ்வரி.

      Delete
  5. "பல்லாங்குழியின்
    வட்டம் பார்த்தேன் " என்ற பாட்டு மிதந்து வந்தது. /

    அருமையான பாடல் ....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
      நன்றி உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும்

      Delete

  6. என் வீட்டில் பல்லாங்குழி உண்டு. எப்பொழுதாவது எல்லோரும் ஒன்று சேரும்போது , பல்லாங்குழி ஆட்டம். UNO என்ற சீட்டாட்டம் என்று களைகட்டும். என் பேரக் குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. விடுமுறை நாட்களில் வீட்டில் அனைவரும் விளையாடுவது உண்டு...

    நல்லதொரு பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் உங்கள் கருத்துக்கு

      Delete
  8. உங்கள் பதிவை படித்தவுடன் பதில் கொடுக்க கூட வரவில்லை சிறிது நேரம் மனம் பின்னோக்கி போய் விட்டது அப்ப அந்தநாள் ஞாபகம் வருதே ,பல்லாங்குழியும் பரம பதமும் போல் சுவராசியம் மிகுந்த ஆட்டம் எதுவுமில்லை நல்ல பதிவு உண்மையிலேயே நம்மவர்கள் விஷ்யத்தொடுதான் விளையாட்டை கூட வைத்திருந்தார்கள்

    ReplyDelete
    Replies
    1. எல்லோரையும் பல்லாங்குழி பின்னோக்கி கொண்டுபோய் விட்டது என்று நினைக்கிறேன். பரபதமும் மிகவும் சுவாரஸ்யமே!

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மலர்.

      Delete
  9. சிறுவயதில் அம்மாவோடு நிறைய விளையாடி இருக்கிறேன்.... இனிய நினைவுகளை மீட்டெடுத்த பகிர்வு.....

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய இளமைக் கால நினைவுகளை என் பதிவின் மூலம் மலர வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

      நன்றி உங்கள் பாராட்டுக்கு வெங்கட்ஜி

      Delete
  10. நம்மூர் திருமணங்களில் கூட நலங்கு விளையாட்டின் போது பல்லாங்குழி இடம் பெறும்.//
    எங்கள் திருமணத்தில் பல்லாங்குழி விளையாட்டு இடம் பெற்றது. என் கணவருக்கு விளையாட உதவினாள் என் சின்ன தங்கை, வாழ்க்கைபயணம் என்ற என் திருமண நாள் பதிவில் அந்த படம் பகிர்ந்து கொண்டேன்.
    என் அம்மா சிறிய சோழி, சிவப்பு குன்று மணி எல்லாம் அழகிய டப்பாவில் போட்டு தருவார்கள் விளையாட . நாங்கள் விடுமுறையில் தம்பி, தங்கை எல்லாம் விளையாடுவோம். எங்கள் பக்கம் திருமண சீர்வரிசையில் பல்லாங்குழி இடம் பெறும் எனக்கு கொடுத்த பல்லாங்குழியை என் மகளுக்கு கொடுத்துவிட்டேன். நினவலைகளை மீட்டியது பல்லாகுழி.

    ரஞ்சனி அவர்கள் சொல்வது போல் டெல்லியில் உள்ள குருவாயூர் கோவிலிலும் குத்துமணிகள் வெண்கல உருளியில் இருக்கும் ,அதில் காசு போட்டு விட்டு காசுடன் குத்துமணிகளை கையால் அள்ளி மூன்று தடவை போடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. திருமணத்தன்று நீங்களும் உங்கள் கணவரும் பல்லாங்குழி விளையாடினிர்கள் .சரி.
      யார் ஜெயித்தது?
      சந்தேகமில்லாமல் நான் சொல்கிறேன்.... நீங்கள் தானே!

      உங்கள் திருமண நினவலைகளை மீட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
      வருகைக்கும் நல்ல விரிவான கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி கோமதி.

      Delete
  11. Nice write about the time-rested or time-honored traditional board game. Incidentally, I still remember the game I played on my wedding day. Unfortunately, I got defeated though I started playing foul.

    ReplyDelete
    Replies
    1. I don't think you got defeated.
      You saw that your better half won the game, so that you can win her heart.
      May be that was how our ancestors tried to teach us the rules of life.

      Thankyou for your appreciative comments.

      Delete
  12. முன்னோர்களின் பழக்கவழக்கங்களை அசட்டை பண்ணாமல் வந்தாலே பல மருத்துவப் பயன்களை அடையலாம் போலிருக்கே!!நானும் இங்கு வந்ததும் mancala வாங்கினேன்.அடிக்கடி விளையாடுவோம்.

    ஊரில் நாங்க சோழி,புளியங்கொட்டைகளுடன் ஈச்சங்கொட்டைகளையும் காய் விளையாடுவதற்கும்,பல்லாங்குழிக்கும்கூடப் பயன்படுத்துவோம். இங்கும் நிறைய பேரீச்சைக் கொட்டைகளை (ஹி ஹி) காய் விளையாட சேர்த்து வைத்திருக்கிறேன்.ஊருக்கு வந்தால் பல்லாங்குழியுடன் திரும்ப வேண்டும். நினைவுகளைக் கிளறி விட்டுட்டீங்க.தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சித்ரா,

      உங்கள் விளையாட்டுப் பருவம் நினைவிற்கு வந்து விட்டதோ?
      நல்ல அருமையான விளையாட்டு தான்.

      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிங்க

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்