Saturday 23 March 2013

நூல் விடத் தெரியுமா?




















" இனி மேல்  உன்னிடம் நான் கெஞ்சப் போவதில்லை .
நீ  தைத்துக்கொடுத்தால்இந்த"கர்டனை"ப்  போடுவோம்.இல்லையென்றால்  விடு"  என்று  சற்றுக்  கோபமாகவே  குரல்  வர  ,  கொஞ்சம்   அசந்து  தான் போனேன்.

சரி  வேறு வழியில்லை  என்று   டேபிளடியில்  இருந்த   உஷாவை (தையல்  மெஷின்) இழுத்து   வைத்து    நூலெல்லாம்   கோர்த்து   தைக்க உட்கார்ந்தேன்.

பல   நாட்களாக   நான் கண்டு கொள்ளாததன்  கோபமோ, என்னவோ    உஷா   சரியாக  வேலை செய்யவில்லை.  என்ன செய்வது?  திரு திரு என முழித்தேன். பார்த்தார்   என் கணவர். ' என் இப்படி  முழிக்கிறாய்?  மெஷின்  வேலை செய்யவில்லியா?'   என்று கேட்டதற்கு  பரிதாபமாக         " ஆமாம்  ".  என்றேன்.

"உன்னைப் பற்றித்  தெரியாதா? ப்ளாக்  எழுத  சொன்னால்    நீ பாட்டிற்கு   லாப்டாப்பே   கதி என்று இருப்பாய்.  நான் ஒரு வேலை சொன்னால் செய்ய மாட்டாய் "  என்று அவருடைய  கோபத்தின்   டிகிரி  எகிற  செய்வதறியாது   திணறினேன்.

சரி பக்கத்திலிருக்கும்    டெய்லர்   ஒருவரைக்   கெஞ்சோ கெஞ்சென்று  கெஞ்சி  கூப்பிட்டு   வந்து   மெஷினில் என்ன  ரிப்பேர்  என்று கேட்டதற்கு
ஏதோ    ICU வில்  இருக்கும்  பேஷண்டைப்  பற்றிக்   கேட்டது போல்
உதட்டைப் பிதுக்கி, " ஊஹூம்....  இனிமேல் ஒன்றும்  செய்வதற்கில்லை "  என்று கூறி   என்னை இன்னும்  திகலடையச்  செய்தார்.

வேறு வழியில்லாமல்   அதே தையற்காரரிடம்  என்  "கர்டனை"  தைத்து  முடித்தேன். ஆனாலும்  தையல் மெஷின் ?  அவரிடமே  வந்த விலைக்கு  விற்று விட்டேன்.  சரி,  ஒரு வழியாக  எதாவது தைக்க வேண்டுமென்றால்  இனிமேல்  யாரும்   என் பிராணனை  வாங்க மாட்டார்கள்  என்று திருப்தியடைந்தேன்.

"அப்படியெல்லாம்   உன்னை  விட்டு விடுவேனா " என்று  விதி  மறு   நாள்   பேப்பரில்   வந்த விளம்பரம்   மூலமாக  விளையாட ஆரம்பித்தது.

on line shopping இல் silai  mini sewing machine  என்று விளம்பரம்  இருந்தது.
உடனே பார்வையை  அதன் மேலே ஓட்டினேன். விலை  shipping charges  எல்லாம் சேர்த்து  ரூ.2000  என்றிருந்தது.

நம் உஷாவிற்கு  தான் பிரியா விடை  கொடுத்து விட்டோமே என்று  இதையாவது      வாங்கலாம்  என்று  நினைத்தேன்.(சொந்த செலவில் சூன்யம்  வைத்து கொள்வது  என்பது இது தானோ?) 

மெதுவாக  என்னவரிடம்  விளம்பரத்தைக்  காட்டினேன்.அவரோ  கண்ணாடியை  சரி செய்து கொண்டே" அதுக்கென்ன இப்போ?" என்றார்.

எப்படி இவரை   சம்மதிக்க வைப்பது  என்று  மண்டையைப் போட்டு உடைத்தேன். இரண்டு நாட்கள்  முழுதாக ஆனது. அவரோ   அசைய மறுத்தார்.

ஒரு" ட்ரம்ப்   கார்ட்" ஒன்றை  வீசினேன்.  "உங்கள் லுங்கியெல்லாம்   தைக்க   இருக்கிறது  இல்லியா? இது கையடக்க சைசில்  இருக்கிறது. தைக்க எளிதாக இருக்கும் என்று தோன்றுகிறது. "  என்று  ஐஸ் வைத்த பிறகு    இந்த மினி மெஷினை வாங்க சம்மதித்தார்.

உடனே   onlineஇல் ஆர்டர் செய்து விட்டேன்.
புக் செய்து விட்டேனே தவிர கொஞ்சம்  உள்ளுக்குள் உதறல் தான் . 
இது ஒழுங்காக வர வேண்டுமே !
 நான்  உடம்பு   வளைந்து  தைக்க வேண்டுமே!

மூன்று  நாட்கள் கழித்து   சிலை(mini silai sewing machine)  வீட்டிற்கு வந்தாள்.
உஷாவின்    குழந்தை போலிருந்தாள்   சிலை.

பக்காவாக பேக்  செய்திருந்த சிலை மெஷினை   மெதுவாக  பாக்கெட்டிலிருந்து   பிரித்து எடுத்தேன். 
சுடச்சுட  தைக்க ஆரம்பித்தேன்.
நன்றாகவே வேலை செய்தது.
" கட கட" வென்று    போனது வந்தது  எல்லாம்   தைத்து முடித்தாயிற்று.

பட்டனை  தட்டினால்  (இட்லியோ  காபியோ இல்லை )   
நாம் தைக்க வேண்டிய  இடத்தில்  லைட்  வருகிறது.
சாளேஸ்வரம்  இருப்பவர்கள்   எளிதாக  தைக்கலாம்.
தூக்குவது எளிது. வெறும் 1 கிலோ  தான் வெய்ட் . 
எந்த இடத்திற்கு வேண்டுமானாலும்   எடுத்து  வைத்துக் கொண்டு தைக்கலாம்.  காலால் மிதிப்பதற்கு   பெடல் ஒன்று கொடுத்திருக்கிறார்கள்.  பேட்டரி/கரண்ட்
என்று   எதிலும் வேலை செய்கிறது. 
 ஒரே சந்தோஷம் தான்   எனக்கு,

அவருடைய    லுங்கியை   எடுத்து வைத்து தைக்க ஆரம்பித்தேன். நன்றாகவே தைத்துக் கொண்டிருந்த மெஷின்  சத்தம் ஒரு மாதிரியாக  வந்தது
மெஷினை நிறுத்தி விட்டுப்  பார்த்தேன். 
ஓ....... " பாபினி"ல்  நூலில்லை.

பாபினை வெளியே எடுத்தேன்.  நூல் சுற்றலாம்  என்று   மெஷினைப் பார்த்தேன்.  அதற்கு  எங்கே  வசதி?
 மெஷினை திருப்பி  திருப்பி  பார்த்தேன்.

ஊஹூம்  ...... ........தெரிய வில்லை.
சரி  அதனுடன் வந்த புத்தகத்தை  அட்டை   to   அட்டை   படித்து  முடித்து விட்டேன்.  ஒரு தடவை இல்லை , இரண்டு தடவை இல்லை.....பலமுறைப்  படித்து  மணப்பாடமாகவே  ஆகிவிட்டது.

அந்தப் புத்தகத்தில்   " இடம் சுட்டிப் பொருள் விளக்கு " எழுதும் அளவிற்கு படித்தாகி விட்டது.  ஒன்றும் பலன் இல்லை.  

மெஷினில் லைட், நூல்  கட் செய்ய ,கரண்டில்  வேலை செய்ய, பெடல்  என்று எல்லாம் இருக்க  பாபின்  நூல்  சுற்ற  வசதியில்லாமலா  இருக்கும்.?

என்  சிற்றறிவிற்கு  " டேக்கா "  கொடுத்துக்  கொண்டிருக்கிறாள்  சிலை.

என்னவரிடம்  உதவி கேட்டால்  அவர் சொல்கிறார்," ஒரு வேலை செய். உனக்குப் பழக்கமான   உஷாவை   வாங்கி   அதில்   பாபினில்  நூல் சுற்றிக் கொள்  ,அப்புறம்  இதில் தைத்துக் கொள்" என்று நக்கலடித்து விட்டு  " பேப்பரில்  அரசியல் நிலவரம் படிக்கிறேன்....தொந்தரவு  செய்யாதே..........."  என்று மிரட்டல் வேறு.

எனக்கு உதவி செய்யாமல்  என்ன  அரசியல்  வேண்டியிருக்கிறது  சொல்லுங்கள். ஏதோ   அரசியல் வாதிகள் எல்லாம்  இவருடைய  ஆலோசனையை  எதிர்பார்த்து  காத்திருப்பது போல்...............ம்க்கும்.

சரி, என் பிரச்சினை  என்னவாயிற்று என்கிறீர்களா?
இன்னும்  அப்படியே தான் இருக்கிறது .......

"சிலை" சோபாவில்  சிலையாகி  இருக்கிறாள். நீங்களே பார்த்துக் கொள்ளலாம் .போட்டோ போட்டிருக்கிறேன்.
என் பிரச்சினையின்   தீவிரம் புரிகிறதா?
யாரிடமாவது   தீர்வு  இருக்கிறதா?...........

   என்  அருமை " சிலை"யின்   பலவித போஸ்கள்   கீழே  .........


























என் சிலையை அப்படியே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்காவது  , என் பிரச்சினைக்குத்  தீர்வு  தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்.  ..................ப்ளீஸ் ...

smiley image courtesy----google.

34 comments:

  1. //ஒரு" ட்ரம்ப் கார்ட்" ஒன்றை வீசினேன். "உங்கள் லுங்கியெல்லாம் தைக்க இருக்கிறது இல்லியா? இது கையடக்க சைசில் இருக்கிறது. தைக்க எளிதாக இருக்கும் என்று தோன்றுகிறது. " என்று ஐஸ் வைத்த பிறகு இந்த மினி மெஷினை வாங்க சம்மதித்தார்.//

    ஆஹா, ட்ரம்ப் கார்டு என்றதும் என்னவோ ஏதோ என்று நினைத்தேன். மேலும் படித்து விட்டு வருகிறேன்.>>>>>

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் உடனடி கருத்துக்கு,

      Delete
  2. சிலை பார்க்க அழகாத்தான் இருக்கிறது. பேசாமல் அதை ஷோ கேஸில் வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

    //," ஒரு வேலை செய். உனக்குப் பழக்கமான உஷாவை வாங்கி அதில் பாபினில் நூல் சுற்றிக் கொள் ,அப்புறம் இதில் தைத்துக் கொள்" //

    இந்த லேடீஸ் தானே செய்யும் விவகாரங்கள் எல்லாம் கடைசியில் இப்படித்தான் முடியும் என்பதை நன்கு உணர்ந்துள்ள அருமையான மனிதர். நல்லதொரு தீர்வு தான் கொடுத்துள்ளார். பாராட்டுக்கள். ;)))))

    ReplyDelete
    Replies
    1. நான் என்னுடைய பிரசினைக்குத் தீர்வு கேட்டால் என் கணவருக்குப் பாராட்டுரை வழங்கி விட்டீர்கள்.
      இனம் இனத்தோடு.....

      Delete
  3. ஆன் லைன் வர்த்தகத்தில் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் இதுபோலத்தான் ஒன்றும் சரியில்லாமல் உள்ளதாக சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஒரு பெண்மணி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் புலம்பி எழுதியிருந்தார்கள்.

    அவர் வாங்கியது காஃபி மேக்கர் என்ற கருவி.

    நீங்களாவது ஏதோ 2-3 கைலி தைத்து விட்டீர்கள்.

    அவர் வாங்கிய காஃபி மேக்கர் சுத்தமாக வேலையே செய்ய வில்லையாம்.

    கியாரண்டி கார்டோ, யாரைத்தொடர்பு கொள்ளணும் என்ற விபரங்களோ ஏதும் அதில் இல்லையாம்.

    மின்னஞ்சல் மூலம் விசாரித்தால் எந்த பதிலுமே வருவது இல்லையாம்.

    ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்து புத்திக்கொள்முதல் பெற்றதாக எழுதியிருந்தார், பாவம்.. .

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது என்னவோ உண்மை தான். நான் ஆன்லைனில் வாங்குவது உண்டு.அந்தத் தைரியம் தான். ஆனால் காலை வாரிவிட்டதோ?

      உங்கள் மீள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி வைகோ சார்.

      Delete
  4. வீண் செலவு தான்... இதை சரி பண்ணுவதற்கு பதில் உருப்படியான தையல் மெசினை வாங்குங்கள்... வேறு வழியில்லை... மேலும் இதில் தொடர்ந்தால் BP வர வாய்ப்புண்டு....

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள். அவ்வளவு தானா என் "சிலை".
      வைகோ சார் ஷோகேசில் வைக்க சொல்லி விட்டார். வேறு யாராவது தீர்வு சொல்கிறார்களா பார்க்கிறேன்.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  5. வேறேன்றை வாங்கி விடுவதுதான் பரவாயில்லை

    ReplyDelete
    Replies
    1. இதுவா தீர்வு?.....

      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் .

      Delete
  6. புத்திக்கொள்முதல் பெற்ற "சிலை" சோபாவில் சிலையாகி இருக்கிறாள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராஜராஜேஸ்வரி, சிலை சிலையாகி என்னைப் பாடாய் படுத்துகிறாள்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete

  7. எனக்கு நூல் சுற்றத் தெரியாது. இருந்தாலும் என் மனசு சொல்லுது. பாபினில் நூல் சுற்ற ஏதோ வழி இல்லாமலா இருக்கும். அருகில் வசிக்கும் இம்மாதிரி மெஷின் வைத்திருப்பவர்கள் இல்லாமலா இருப்பார்கள்.. ஹி..ஹி..

    ReplyDelete
    Replies
    1. GMB சார்,

      நீங்கள் சொன்ன மாதிரி யாராவது வைத்திருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்ததில் ஒன்றும் புலனாகவில்லை.
      வேறு யாராவது வேறு உபாயம் .....?
      பார்ப்போம்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  8. அட முதலில் என் ஆசையை தூண்டி இப்படி கேள்வியில் முடித்து விட்டீர்களே (வடை போச்சே )முடிந்தவரை தெரிந்தவரை விசாரித்த பிறகு குறிப்பு கொடுக்க முடிந்தால் கொடுகிறேன் தோழி

    ஒரு பஞ்ச் வச்சி அசத்திடீங்க


    ஏதோ அரசியல் வாதிகள் எல்லாம் இவருடைய ஆலோசனையை எதிர்பார்த்து காத்திருப்பது போல்...............ம்க்கும்.//

    ReplyDelete
    Replies
    1. நன்றி நீங்கள் தான் முதலில் குறிப்பு கொடுக்க முயல்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.என் கஷ்டம் உங்களுக்காவது புரிந்ததே!

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி மலர்.

      Delete
  9. நூல் விட தெரியுமா என்று தலைப்பு பார்த்து பட்டம் விட்டீர்களோ என்று நினைத்தேன், படித்தால் கதை வேறாக உள்ளது. அனுபவம் புதுமைதான்.

    ReplyDelete
    Replies
    1. பட்டம் விடும் வயதா எனக்கு? என்னை அவ்வளவு யூத் என்று நினைத்துக் கொண்டதற்கு நன்றி.

      உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள் திருமதி ரத்னா .

      Delete
  10. கவலைப் படாதீர்கள். google ஆண்டவர் துணை என்றும் உண்டு. படத்தில் silai mini sewing machine brand எது என்று தெளிவாக தெரியவில்லை.
    அந்த brand name உடன் silai mini sewing machine என்று google search செய்து பாருங்கள். நான் பார்த்ததில் சில youtube செய்முறைகள் கூட வந்தன. முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எனக்காக சிரமப்பட்டு you tube எல்லாம் தேடியிருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி. ஆனால் வருத்தமான விஷயம் என்ன என்றால் google, youtube எல்லாம் அலசி விட்டேன். இதை வைத்து தைப்பதற்கு சொல்லித் தருகிறார்கள் . ஆனால் பாபின் நூல் சுற்றவது பற்றி மூச்சு
      விடவேயில்லையே! சரி, என் கஷ்டம் என்னோடு.....

      உங்கள் வருகைக்கும், எடுத்துக் கொண்ட சிரமத்திற்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
      தொடர்ந்து வந்தால் மகிழ்வேன்.

      Delete
  11. "என் பிரச்சினையின் தீவிரம் புரிகிறதா? யாரிடமாவது தீர்வு இருக்கிறதா?..........."_____எதிரில் வைத்துக்கொண்டு பார்க்க பார்க்கத்தான் இப்படி நினைக்கத்தோணும்.'உஷா'வை வைத்திருந்த இடத்தில் 'சிலை'யை வைத்துவிட்டு மறந்திடுங்க.ஹி...ஹி.ஒரு பத்து நாள் கழித்துப் பார்த்தால் இந்த அளவுக்கு படபடப்பு வராது.

    "நூல்விடத் தெரியுமா?"__என்றதும் கப்ஸா/சும்மாகதை அடிப்பதைக் கேக்கறீங்களோன்னு நென‌ச்சிட்டேன்.

    ஆனாலும் நல்ல கலர் காம்பினேஷனில் அழகா இருக்கு 'சிலை'.

    ReplyDelete
    Replies
    1. என் சிலையைப் பார்த்து ஆண்,பெண் பாகுபாடில்லாமல் அழகி என்கிறீர்கள் . வைகோ சார் ஷோகசில் வைக்கஸ் சொன்னார்.
      நீங்களோ கட்டிலடியில் வைக்க சொல்லிவிட்டீர்கள்.
      இன்னும் யார் யார் என்ன கருத்துக்கள் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அதற்குப் பிறகு ஒரு தீர்மானத்திற்கு வருகிறேன்.

      உங்கள் வருகைக்கும், நகைச்சுவையான கருத்துக்கும் நன்றி சித்ரா.

      Delete
  12. நாளைப்பார்த்து சொல்கிறேன். பழைய உஷாவில் பாபின் நூல் சுற்றும் இடம் கெட்டுவிட்டால் பாபினை ஒரு பென்சிலோ அல்லது பேனாவில்லே மாட்டிக் கொண்டு கைபிடியில் சுற்றினால் நூல் சுற்றிக் கொள்ளும் இதில் அப்படிஎதுவும் இல்லையே !
    பட்டம்விட வயது தேவை இல்லை வடநாட்டில் பட்டம் விடும் திருவிழாவில் வயது வித்தியசாம் இல்லாமல் எல்லோரும் பட்டம் விடுவார்கள்.
    சிலை மிக அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோமதி நானும் அப்படி பென்சில் வைத்து எல்லாம் சுற்றியிருக்கிறேன். அப்படித் தான் செய்யப் போகிறேன்.

      நன்றி ஒரு நல்ல tips கொடுத்ததற்கு மட்டுமல்ல ,உங்கள்வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  13. சிலை, சிலை நீங்கள் எழுதியதாலேயே அது சிலை போல ஆகிவிட்டது போல்!

    ஹிந்தியில் தையலுக்கு “சிலாய்” என்று சொல்வார்கள். சிலாய் மெஷின்!

    ஏங்க, பாபின் - ல எப்படி நூல் சுத்தறதுன்னு கேட்டா, ஹிந்தி சொல்லித் தர வந்துட்டீங்களேன்னு கோபிக்கக் கூடாது. மெஷின் கொஞ்சம் பார்த்துட்டு வரேன்!

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்ஜி,

      சிலை என்று எழுதியது ஒரு எதுகை மோனைக்காகத் தான் (word pun).
      மெஷினை கொஞ்சம் இல்லை நிறையவே பார்த்து விட்டு வந்து தீர்வு சொல்லுங்கள். யாருமே தீர்வு சொல்லவில்லைஎன்றால் ஒரு அறிவிப்பு
      கொடுக்கப் போகிறேன்.
      "என் ஐயத்தைத் தெளிவிப்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசு"என்று
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  14. அடடா! சிலை, சிலையாக நின்றுவிட்ட மர்மம் பாபினில் நூல் சுற்ற முடியாததாலா?

    எனக்குக் கூட இந்த டெலிஷாப்பில் இந்த மாதிரி குட்டி தையல் மிஷினைப் பார்த்தால் ரொம்ப டெம்ப்டிங் ஆக இருக்கும். ஆனால் உங்களவரை விட எங்களவர் ரொம்ப ஸ்ட்ராங்! எதற்கும் அசைய மாட்டார். அதனால் ஆசை மனதளவிலேயே நின்று விட்டது.

    உங்கள் பிரச்னை சீக்கிரம் முடிவுக்கு வரட்டும். பிறகு அதையும் ஒரு பதிவாக்கி விடுங்கள்!

    என்னிடம் நீண்ட நாட்கள் முன்பு கைக்கு அடக்கமாக ஸ்டேப்ளர் போல ஒரு தையல் எந்திரம் இருந்தது. அதிலும் நூல் சுற்ற வழியே இல்லை. அப்போது என்னிடம் உஷா இருந்ததால் அவளை 'நூல் சுற்றச்' சொல்லி இவளை வைத்துத் தைத்துக் கொண்டிருந்தேன்.கொஞ்ச நாட்கள்தான். பிறகு வேலை செய்ய வில்லை.

    இதைப்போல பொருட்கள் வாங்கும்போது மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் பதிவு நகைச்சுவையுடன் எச்சரிக்கை மணியையும் அடித்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பெண் புத்தி பாபின் இல்லா புத்தி என்று தெளிவாகிவிட்டது ரஞ்சனி.
      உஷாவிலேயே திருமதி கோமதி அரசு சொல்வது போல் பென்சில் வைத்து எல்லாம் பாபின் சுற்றியிருக்கிறேன். அதைத் தான் இதிலும் செய்ய இருக்கிறேன் .

      என்னவரின் ஐடியா இது,"ஒரு பதிவு எழுதிவிடு. .யாராவது வாங்கியிருந்தால் உதவி கிடைக்கும் "என்று.
      நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.


      Delete
    2. ஆயிரம் பொற்காசா?
      ஆண்டவா! யாருக்கும் கிடைக்கக் கூடாதே!

      Delete
    3. அப்படி யாராவது தீர்வுடன் வந்து விடுவார்களோ? நான் ஆயிரம் பொன் ரெடி பண்ண வேண்டியிருக்கும் நிலை வருமா என்ன?
      ஆண்டவா...... ஏதோ விளையாட்டாக சொல்லிவிட்டேன்.
      நான் எங்கே போவேன் ஆயிரம் பொன்னிற்கு?

      உங்கள் வேண்டுதலுக்கு நன்றி ரஞ்சனி.

      Delete
  15. தோழி மகளிர் கடலில் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள்உங்கள் தள முகவரி கொடுத்து அவ்வளவே இணைத்தவுடன் நம் பதிவிடும் போதெல்லாம் பதிவேற்றம் செய்யபடும் நீங்கள் ஒவ்வொரு முறையும் அங்கு சென்று பதிவை இணைக்க வேண்டிய அவசியமில்லை check ur gmail

    ReplyDelete
    Replies
    1. தகவலிற்கு நன்றி மலர்.

      Delete
  16. ரீல் விடறமாதிரி நூல் விடரதுன்னு நினைச்சிண்டு உள்ளே வந்தால் சிலையைப் பார்க்கும்படி, ஹாஸ்யக் கட்டுரை கணக்காய் படிக்கப்,படிக்க
    தையல் மிஷின் ஸம்பந்தப்பட்ட விஷயம். தையல் சொல் கேளேல் என்று உங்களவர் மறுத்திருந்தால், இத்தனை விஷயங்களும், அதற்கு பதில்களும்
    எங்கே போனால் கிடைக்கும்? ஹிஹி எனக்கு மிஷினைப்பற்றி ஒன்றும் தெரியாது. அனுபவம் கெயின் பண்ணி இருக்கிறீர்கள். இதுதான் எனக்குத் தெரிகிரது. உங்கள் எழுத்து நடை ரஸித்தேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாட்சி மாமி,
      உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.என் பதிவிற்கு அழகாய் கருத்து
      சொல்லியிருக்கிறீர்கள்.தொடர்ந்து வாருங்கள்.
      மிக்க நன்றி

      வணக்கத்துடன்,
      ராஜி

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்