Sunday 1 September 2019

கம்பனும் , ஜன்னலும் .( கம்பன் என்ன சொல்கிறான்?-2)

Image courtesy :http://www.bhagwanbhajan.com


கம்பனும்,செல்போனும் படிக்க இங்கே க்ளிக்கவும்.

பக்கத்து வீடு அமளி துமளி பட்டுக் கொண்டிருந்தது. ஜானுவை  பெண் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னார்கள்.
ஜானுவின் மாமா, அத்தை, சித்தி , பெரியம்மா , எல்லோரும் அவரவர் குடும்பத்துடன், வீடு நிறைக்க வந்து விட்டார்கள். குஞ்சு, குளுவான்கள் லூட்டியடித்துக் கொண்டிருந்தனர்.

"அந்த ஜமுக்காளத்தை இங்கே விரி."பெரியம்மாவின் குரல்.

"சிவதனுசை முறிப்பதை விடவும் மாப்பிள்ளைக்கு  பெரிய சோதனை வெயிட்டிங்....." ஜானகியின் தம்பி சொல்ல,

"அது என்னடா? " சித்தி கேட்டாள்.

"நீங்கள் எல்லோரும் சேர்ந்து செய்த சொஜ்ஜி பஜ்ஜியை மாப்பிள்ளை சாப்பிட்டால் தான் ஜானுவை அவருக்குக் கல்யானம் செய்து கொடுப்பாராம். அப்பாவுடைய கண்டிஷன்."

சித்தி சிரித்துக் கொண்டே அவனை அடிக்கக் கையை ஓங்கவும், ஜானுவின் அம்மா" வேலை எதுவும் இல்லையாடா உனக்கு " என்று முறைத்தாள்.

வீடே களைக் கட்டியது.

நேரம் செல்ல செல்ல எனக்கும் இங்கே இருப்புக் கொள்ளவில்லை. மாப்பிள்ளை வீட்டார் வந்தாச்சான்னு  என் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"ராஜி, பேசாமல் நீ அவர்கள் வீட்டிற்கே போய் விடேன். இப்படி ஜன்னலுக்கும், சோபாவிற்கும், நடையாய் நடக்கிறாய்" அவர் கிண்டலடிக்க...

" சும்மா ஒரு ஆர்வம் தான்... நான் பார்த்து வளர்ந்த பெண் ஜானு. அவளை மணக்கப் போகும் பையன் எப்படின்னு ஆர்வம் இருக்காதா?

சிறிது நேரத்திற்கெல்லாம் சர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. மாப்பிள்ளை வீட்டினர் தான். மீண்டும் நான் எட்டிப் பார்க்க.... மாப்பிள்ளை.... . ஜானுவிற்கு ஏத்த ஜோடி தான் என் மனம் கணக்குப் போட்டது.

அவள் ஃபெர்ண்ட்ஸ்  வெளியே எட்டிப் பார்க்க,  ஜானுவின் உறவினர் எல்லொருடைய தலையும்,  எட்டிப் பார்ப்பது புரிந்தது.

பக்கத்து வீட்டு ஜானகிக்குத் திருமணம் என்றாலே , இவ்வளவு பேர் கூடும் போது, மிதிலாபுரி ஜானகி சுயம்வரம் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க ஆர்ம்பித்தேன்... அன்று கூட்டம் எப்படி அலைமோதியிருக்கும்!

ஒரு நடை, மிதிலாபுரிக்குப் போகலாமா? பைசா செலவில்லாமல் கம்பன் அழைத்து சென்று விடுகிறார். வாங்க போகலாம்....

இதோ மிதிலாபுரி....

"மன்னன் ஜனகனின் மகள் ராஜகுமாரி ஜானகிக்கு சுயம் வரம்" எல்லா பக்கமும் செய்தி பறந்தது.

சுயம்வரத்திற்கு மன்னர்களும், அரச குமாரர்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

மக்கள் எல்லோரும்," முனிவர் விசுவாமித்திரர், அயோத்தி ராஜகுமாரர்களை அழைத்து வருகிறாராம். கரிய செம்மல் ராமன் சிவ தனுசை நாண் பூட்டி நம் சீதைக் கரம் பற்றப் போகிறாராம்." சொல்லிக் கொண்டிருந்தனர்.(மேட்ச் ஃபிக்சிங்?)

ராம லஷ்மணர்கள் வரவை எதிர் பார்த்து கூட்டம் கூட்டமாய், தெருவெங்கும் மக்கள், உப்பரிகை எல்லாம் மக்கள் வெள்ளம், கன்னில் தெரியும் ஜன்னல்கள் எல்லாம் தலைகள்.

அட...நீலா ....கலா வீட்டுக்குள்  போறாளே.( நீலா, மாலா, கலா நான் சூட்டியப் பெயர்கள்)

நாமும் அவளைப் பின் தொடர்வோம்.

"கலா, மாலா ....உங்க ரெண்டு பேருக்கும் தெரியுமாடி? நம் சீதையை மணக்கப் போகும் ராமன் வரப் போகிறாராம்." நீலா சொல்ல

"எங்களுக்கும் தெரியும். பெரிய ராணுவ ரகசியம் சொல்ல வந்துட்டாள். ஊருக்கே தெரியும்.எங்களுக்கு மட்டும் தெரியாதா?"

"ஆமாம் நீங்க ரெண்டு பேரும் ஏண்டி ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு நிக்கிறீங்க..?"

"ராமனைப் பாக்க தான்." கலாவும், மாலாவும் கோரஸாகக் கத்தினார்கள்.

"அப்படியா! " 
கண்கள் விரிய நீலா " நானும் இங்கேருந்து பாக்கட்டுமாடி?" கெஞ்சிக் கேட்க..

"உனக்கெல்லாம் இடம் கிடையாது. ரெண்டு பேருக்கு மட்டும் தான் இங்கே இடமிருக்கு" அழுத்தமாக பதில் வந்தது கலாவிடமிருந்து.

"கொஞ்சம் எனக்கும் வழி விடேண்டி. நான் பார்க்க வேண்டாமா நம் சீதை மணாளனை?"

" உனக்கு வழி விட்டால் நான் எப்படி பார்ப்பதாம்?"இது கலா.

" நீயாவது எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுடி மாலா. நானும்  ராமனைப் பார்க்கிறேனடி."நீலா கெஞ்சினாள்.

அவர்கள் மசிந்தால் தானே....

'நாங்கள் எப்பலேந்து இங்கே காத்திருக்கிரோம். இவள் இப்ப வருவாளாம். நாங்கள் பிடித்த இடத்தை இவளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமாம். போடி போ...வேறு ஆளைப் பாரு." என்று இருவரும் திரும்பித் தெருவில் ராமன் வருகிறானா? என்று பார்க்கத் தொடங்கி விட்டனர்.

நீலா எட்டிப் பார்க்கிறாள்...ம்ஹூம்...ஒன்றுமே தெரியவில்லை. சற்றே குதித்துப் பார்க்கிறாள்... இப்பவும் கண்ணுக்கு எதுவுமே எட்டவில்லை. பின் என்ன தான் தெரிகிறதாம் இவளுக்கு?

" இவர்களுடைய கூந்தலும், இடுப்பு மேகலையும்  தான் எனக்குத் தெரிகிறது " என்று நொந்து கொள்கிறாள்.

சட்டென்று அவளுக்குத் தெருவும், தெருவில் போகும், ராமனின் தரிசனமும் கிடைத்து விடுகிறதாம். 

எப்படி என்று கம்பன் சொல்கிறார்...பாருங்கள்..

ஜன்னலை  மறைத்துக் கொண்டு நின்றிருந்த பெண்களின் வளைந்த இடைகள் கொடுத்த இடைவெளி ஒரு ஜன்னலாக மாற, அந்த இடுக்கில் பார்க்க , ராம தரிசனம் கிடைத்து விட்டதாம்.

இதை விளக்கும் கம்பன் பாடல் இதோ...

பால காண்டம்( உலாவியற் படலம்)
பாடல் எண் 1079


கருங்குழல் பாரம்................
..............................................
நெருங்கின மறைப்ப, ஆண்டு ஓர்
நீக்கு இடம் பெறாது, விம்மும்
பெரும் தடம் கண்ணி, காணும்
பேர் எழில் ஆசை தூண்ட,
மருங்குலின் வெளிகள் ஊடே,
வள்ளலை நோக்குகின்றாள்.

பொருள்:

தனக்கு முன்னே வந்து இராமணைக் காண இடம் பிடித்துக் கொண்டுள்ள  மாதர்களின் கரிய கூந்தல் தொகுதியும், மேகலை சூழப் பெற்ற இடை சார் பகுதியும், நெருக்கம் உற்றனவாய் (இராமன் திருமேணி காணாதவாறு) மறைத்து நிற்றலால், இராமனைக் காண இவையற்ற இடம் இல்லாமையால், வருந்தி மறுகுகிறாளாம் மிகப் பெரிய கண்களையுடைய ஒருத்தி. (அவள் கேள்வியுற்ற இராமனது) பேரழகு, அவனைப் பார்த்தாக வேண்டும் என்னும் ஆசையினைத் தூண்டுதலால், முன்னே மறைந்து நிற்கும் மகளிரின் இடையின், இடைவெளிகளிடையே வள்ளலாகிய இராமனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

பரந்தாமனைப் பர்க்க தள்ளு முள்ளு நடப்பது புதிதா என்ன? "ஜருகண்டி!ஜருகண்டி!" உங்களுக்கும் காதில் விழுமே இப்போது... அதையே தான் கம்பனும் சொல்கிறார். அவருடைய கற்பனையை என்னன்னு சொல்றது !

திரும்பத் திரும்ப படிக்கத் தோணலை இந்தப் பாட்டை? படிச்சிட்டே இருங்க...

வேறொரு கம்பன் பாடலுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்....
நன்றி...

6 comments:

  1. அழகான பாடல் தான்...

    தேர்ந்தெடுத்து பகிரும் பாடல்கள் சிறப்பு. தொடரட்டும் கம்பனின் கவித் தோரணம்.

    ReplyDelete
    Replies
    1. திடீரென்று கம்பனின் ராமாயணம் மேல் தீராத பற்று உண்டாயிற்று. சில பாடல்களை திரும்பத் திரும்ப படிக்கத் தோன்றுகிறது. அதையே பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டால் தான் என்ன? என்று தோன்றவே தான் இந்த முயற்சி.

      நன்றி வெங்கட்ஜி, வருகைப் புரிந்து பாராட்டியதற்கு.

      Delete
  2. அருமையான அலசல்
    சிறந்த இலக்கிய விளக்கம்
    பாராட்டுகள்

    ReplyDelete
  3. அருமையான பாடல்.
    விளக்கம் அருமை.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்